கொளத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் தர்ணா போராட்டம்


கொளத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் தர்ணா போராட்டம்
x

கொளத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

கொளத்தூர்:

விற்பனை கூட்டம்

கொளத்தூரில் சேலம் வேளாண் விற்பனையாளர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பருத்தி பயிர்களை விற்பனை செய்வது வழக்கம். இதற்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படும் பருத்திகளை வாங்குவதற்காக கோவை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்து இந்த பருத்தியை கொள்முதல் செய்து செல்கின்றனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் கொளத்தூர் வேளாண் விற்பனை கூட அலுவலகத்தில் நேற்று நடந்த ஏலத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே தாங்கள் கொள்முதல் செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வருவது இல்லை எனவும் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து விவசாயிகளுடன், உள்ளூர் வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர்.

விலை அதிகரிப்பு

கடந்த வாரங்களில் ஒரு கிலோ பருத்தி ரூ.71-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று பருத்தியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.4 அதிகரித்து ரூ.75-க்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் சுமார் 3 ஆயிரம் மூட்டை பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.


Next Story