விவசாயிகள் முற்றுகை போராட்டம்
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.
இழப்பீடு
தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதிஅளித்தபடி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 உடனே வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் தாமதமின்றி வழங்க வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டு சம்பா காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்க வேண்டும். நிலக்கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து குறைவில்லாமல் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
கடன்
கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் வரும் வருவாய் கிராமங்களில் விளை நிலங்களின் கணக்கின்படி கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மண்டல தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர்கள் மணி, ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் துரை.பாஸ்கரன், மாவட்ட கவுரவ தலைவர் திருப்பதி வாண்டையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதன்மை செயலாளர் சந்திப்பு
பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவை தள்ளிக்கொண்டு அலுவலக வளாகத்துக்குள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து பேசினார்.
22 சதவீதம் வரை ஈரப்பதம்
அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, தற்போது மழைக்காலமாக இருப்பதால் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் 17 சதவீதம் என்பதை உயர்த்தி 22 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் 2 கொள்முதல் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றார். இதைகேட்ட ராதாகிருஷ்ணன், உங்களது கோரிக்கைள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.