25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் போராட்டம்


25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் போராட்டம்
x

25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் தொடர் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

காவிரி, முல்லை பெரியாறு உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும், மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தவேண்டும் என்பது உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் தொடர் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் 2-வது நாளான நேற்று இயக்குனர் கவுதமன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். முன்னதாக நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவருடைய தந்தைக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் மாவட்டங்கள்தோறும் இலவச பயிற்சி முகாம்களை அரசே நடத்தவேண்டும். நாளை (இன்று) உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம்' என்று கூறினார்.

போராட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் பொதுச்செயலாளர் துரைசாமி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் எல்.பழனியப்பன், வைகை-முல்லை, பெரியாறு-வைகை பாசன கூட்டமைப்பு தலைவர் எல்.ஆதிமூலம் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


Next Story