துறையூரில் விவசாயிகள் சாலை மறியல்


துறையூரில் விவசாயிகள் சாலை மறியல்
x

பருத்திக்கு சரியான விலை வழங்க கோரி துறையூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

பருத்திக்கு சரியான விலை வழங்க கோரி துறையூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

துறையூரில் உள்ள அரசு பருத்தி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று விவசாயிகளிடமிருந்து பருத்தி பெறப்பட்டது. கடந்த முறை கிலோ ரூ.90-க்கு பருத்தி வாங்கப்பட்டது. ஆனால் நேற்று கிலோ ஒன்றிற்கு ரூ.63-க்கு பெறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதிகாரியிடம் கூடுதல் விலை கொடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் விவசாயிகளிடம் முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால ஆத்திரம் அடைந்த துறையூர், உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, புலிவலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி-துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் பருத்திக்கு சரியான விலை வழங்க வலியுறுத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story