விவசாயிகள் திடீர் தர்ணா
பழனி உழவர் சந்தை முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகள் வியாபாரம் செய்யவில்லை. அவர்கள் சந்தை முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், உழவர் சந்தை வாசலிலேயே ஏராளமானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டப்படுவதால். அவர்களுக்கும் உழவர் சந்தை அருகே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை கடைகளை திறக்க மாட்டோம் என்று கூறினர். இதுதொடர்பாக ஓரிரு நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். அதிகாலை உழவர் சந்தை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.