போலி டாக்டரை கைது செய்யக்கோரி சாலையில் உருண்டு விவசாயி 'திடீர்' போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது போலி டாக்டரை கைது செய்யக்கோரி விவசாயி ஒருவர் சாலையில் உருண்டு 'திடீர்' போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா, கல்வி உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.அவற்றை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் கடந்த வாரம் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயி போராட்டம்
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு திருவண்ணாமலை அருகில் கொளக்கரவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மனைவி மற்றும் மாற்றுத் திறனாளியான மகனுடன் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள போளூர் சாலையில் மகனை அமர வைத்து விட்டு சாலையில் திடீரென படுத்து உருண்டு கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி மற்றும் அவரது மனைவி, மகனை சாலையோரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், ''எங்களுக்கு 2½ ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு போலி டாக்டர் ஒருவர் ஊசி போட்டார். அவருக்கு 2 மாதம் கழித்து ஊசி போட்ட இடத்தில் கட்டி ஏற்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து பரிசோதனையில் எனது மகனுக்கு எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்தனர்.
போலி டாக்டர்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சொத்துக்கு ஆசைப்பட்டு போலி டாக்டர் மூலம் ஊசி மூலம் எய்ட்ஸ் நோயை எனது மகனுக்கு ஏற்படுத்தி உள்ளனர். போலி டாக்டர் இன்னும் கிராமத்தில் உலா வருகின்றார். இது குறித்து கடந்த 4 வருடங்களாக சுகாதார துறை மற்றும் போலீசில் அனைத்து அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு போலி டாக்டரை கைது செய்ய வேண்டும்'' என்றார்.
பின்னர் அவர்களை போலீசார் உரிய விசாரணை நடத்துவதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.