6 அடிக்கும் குறைவான கரும்பை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்


6 அடிக்கும் குறைவான கரும்பை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே 6 அடிக்கும் குறைவான கரும்பை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கலெக்டர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழக அரசு சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதற்காக வீடு, வீடாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 1,254 ரேஷன் கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 906 பேருக்கும், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 434 பேருக்கும் ஆக மொத்தம் 6 லட்சத்து 15 ஆயிரத்து 340 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது.

கரும்பு கொள்முதல்

இதையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்குவதற்காக அவற்றை கொள்முதல் செய்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான 13 கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம் சரியாக இருக்கிறதா, 6 அடி உயரம் இருக்கிறதா ஆகியவற்றை சரிபார்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் அருகே பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அறுவடை செய்த கரும்புகளை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி சரிபார்த்து கொள்முதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

விவசாயிகள் திடீர் போராட்டம்

அப்போது குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் சென்றபோது அங்குள்ள விவசாயிகள் சிலர், 6 அடிக்கு குறைவாக 5 அடி, 5½ அடி உயரமுள்ள கரும்புகளையும் சேர்த்து கொள்முதல் செய்யுமாறு வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததோடு 6 அடி உயரமுள்ள கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்வோம் என்று திட்டவட்டமாக கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள் கூறியபடி அங்கிருந்த தொழிலாளர்கள், 6 அடி உயரமுள்ள கரும்புகளை மட்டுமே வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அங்குள்ள கரும்பு தோட்டத்திலேயே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கரும்புகளை வெட்டவிடாமல் அதிகாரிகளையும், தொழிலாளர்களையும் தடுத்து முற்றுகையிட்டனர். விவசாயிகளிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கரும்புகளை வெட்டவிடாமல் விவசாயிகள் தடுத்தனர்.

கலெக்டர் பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் குச்சிப்பாளையம் கிராமத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டர் மோகன் கூறுகையில், 6 அடி நீளமுள்ள கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படிதான் கரும்புகளை பெற முடியும் என்றார். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே கலெக்டர் மோகன் குறுக்கிட்டு பேசும்போது, நானும் விவசாயிதான், விவசாய குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறேன். விவசாயிகளின் கஷ்டங்கள் எனக்கும் தெரியும். அரசாணையில் உள்ளபடிதான் கரும்புகளை கொள்முதல் செய்ய முடியும். மேலும் இன்றைக்கு 6 அடிக்கு குறைவான கரும்புகளை கொள்முதல் செய்தால் பிரச்சினைகள் ஏற்படும். நாளையே 6 அடிக்கு குறைவான கரும்பை மக்களுக்கு வழங்கினால் விவசாயிகள் என்று கூறும் நீங்கள் பொதுமக்கள் எனக்கூறி 6 அடிக்கு குறைவாக கரும்பு வழங்கப்படுவதாக பிரச்சினை செய்வீர்கள், அதன் பின்னர் வடிவேல் காமெடியைப்போல இது வேற வாய் அது நாற வாய் என்றும், 6 அடி கரும்பு கொடுக்க அரசு கூறியுள்ளது, அதைத்தான் வழங்க வேண்டுமென்று கேட்பீர்கள். அதனால் 6 அடிக்கு குறைவான கரும்புகளை கொள்முதல் செய்யமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதன் பிறகு கரும்பு கொள்முதல் செய்யும் பணி தொடர்ந்து நடந்தது.


Next Story