தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை


தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
x

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர். கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

தென்னை விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் வாய்க்கால் வரப்பு ஓரங்கள் மற்றும் தோப்பாகவும் தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இதன் மூலமாக கணிசமாக வருமானம் விவசாயிகள் கண்டு வந்தனர்.

இந்தநிலையில் 2018-ம் ஆண்டு இப்பகுதிகளில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலில் சிக்கி எண்ணற்ற தென்னை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் இழந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். அதிலிருந்து இன்னமும் முழுமையாக மீண்டு வர முடியாமல் ஏராளமான தென்னை விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களில் இருந்து அதிகளவில் தேங்காய்கள் காய்த்து வருகிறது.

தேங்காய் ஏற்றுமதி

இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் தேங்காய்கள் திருச்சி, சென்னை, காங்கேயம் மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தேங்காய் வியாபாரிகள் மூலமாக, ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தென்னை விவசாயிகள் மூலமாக, தேங்காய்கள் இப்பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளில் வாங்கப்பட்டு உழவர் சந்தை மற்றும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாரச்சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இப்பகுதிகளில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் நன்கு முற்றிய தேங்காய்களை உடைத்து இப்பகுதிகளில் உள்ள நவதானிய விற்பனை நிலையங்களில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 ஆகிய விலைகளில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு தேங்காய் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை ஆகி வருவதாகவும், இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

விலை வீழ்ச்சி

தற்போது இப்பகுதிகளில் தேங்காய் ஒன்று ரூ.7 மற்றும் ரூ.8 ஆகிய விலைகளில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறிய அளவிலான தேங்காய் ஒன்று ரூ.2, ரூ.3-க்கு கூட விற்பனை ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய தேங்காய் விலை வீழ்ச்சி நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.

தேங்காய், இளநீர், தேங்காய் உரி மட்டை, தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய், தேங்காய் மிட்டாய், தேங்காய் பூ இப்படி ஏராளமான முறைகளில் மதிப்பு கூட்டப்பட்டு விற்பனை ஆகி வந்தாலும் விவசாயிகளுக்கு பயனின்றி மிக மிக குறைந்த விலைக்கே தேங்காய் விற்பனை ஆகி வருவதாகவும், ஒரு சில கடைகளில் தேங்காய் வேண்டாம் ஏற்கனவே நிறைய விற்பனை ஆகாமல் உள்ளது என்றும் கூட வியாபாரிகள் கூறி வருகின்றனர். இதனால் கடை கடையாக தேங்காய்களை சுமந்து கொண்டு விவசாயிகள் அல்லல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கோரிக்கை

தேங்காய்களுக்கு உரிய விற்பனை விலை கிடைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story