பலாப்பழங்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
வடகாடு பகுதியில் பலாப்பழங்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
பலாப்பழங்கள் உற்பத்தி
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், பனங்குளம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், மறமடக்கி, ஆலங்காடு, கீழாத்தூர், வெள்ளாகுளம் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மூலமாக பலாப்பழங்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இங்கு உற்பத்தி ஆகும் பலாப்பழங்களை வடகாடு, மாங்காடு, புளிச்சங்காடு, கைகாட்டி, கீரமங்கலம், குளமங்கலம், மறமடக்கி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகள் மூலமாக எடை மற்றும் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பலாப்பழ விவசாயிகள் பலரும் தங்களது பலா மரங்களை குடும்ப வறுமையின் காரணமாக ஒத்தி மற்றும் குத்தகைக்கு ஆண்டு கணக்கில் வியாபாரிகளிடம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றன.
ருசி மிகுந்த பலா
இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் மண்ணின் தன்மைக்கேற்ப மிகவும் ருசியாக சுவை மிகுந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரெயில்வே நிர்வாகம் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைந்த பலாப்பழங்களை ரெயில் நிலையத்தில் விற்பனை செய்ய அனுமதி அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பலாப்பழ ஏற்றுமதி
இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் திருச்சி, மதுரை, தஞ்சை, நாகப்பட்டினம், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி நடைபெற்று வருகின்றன. மேலும் மும்பை, கர்நாடகா, கேரளா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விலை வீழ்ச்சி
எனினும் விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் காணும் வகையில் பலாப்பழ விலை இருப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது. தற்போது பலாப்பழ உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை வீழ்ச்சி கண்டு கிலோ ரூ.10-க்கு வாங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதேபோல் சிறிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.30 முதல் பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.300 முதல் ரூ.500 வரை ஏல முறையில் விற்பனை ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இங்கு நாள் தோறும் சுமார் 100 டன் முதல் 500 டன் வரை ஏற்றுமதி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு விலை வீழ்ச்சி கண்ட சமயங்களில் பலாப்பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு விடுவதால் பலா மரங்களிலேயே பலாப்பழங்கள் பழுத்து வீணாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். இப்பகுதிகளில் மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.