விவசாயிகள் மின் இணைப்பு பெறவிண்ணப்பிக்கலாம்


விவசாயிகள் மின் இணைப்பு பெறவிண்ணப்பிக்கலாம்
x

ஆதிதிராவிடர்-பழங்குடியின விவசாயிகள் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர்

மானியம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சரின் 2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையில் மோட்டார் குதிரை திறனுக்கேற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் வரை மானியத்தில் 900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியினர் என மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளாகவும், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி. (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்தில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்.பி. மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 லட்சத்தில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500-ம், 10 எச்.பி. மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்தில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 எச்.பி. மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்தில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை ரூ.40 ஆயிரமும் என்ற விகிதத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ, அரியலூர் என்கிற முகவரிக்கு வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இணையதளத்தில் பதிவேற்றம் செய்து...

தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். 2017-2022-ம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், "அ" பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண். மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம், என்று கலெக்டா் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story