மயிலாடுதுறையில், விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறையில் விவசாயிகள் டிராக்டரில் ஊர்வலம் சென்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறையில் விவசாயிகள் டிராக்டரில் ஊர்வலம் சென்றனர்.
டெல்லியில் போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதிமொழி அளித்தது. இதை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் ஊர்வலம் நடந்தது. மயிலாடுதுறை காவிரி நகரில் தொடங்கிய பேரணிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குறைந்தபட்ச ஆதார விலை
டெல்லியில் போராடிய விவசாயிகளிடம் மத்திய அரசு தந்த உறுதி மொழியை உடனே நிறைவேற்ற வேண்டும். விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் தரவேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பயிர்க் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் 75-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பியப்படி சென்றனர். காவிரி நகரில் தொடங்கி பூக்கடை தெரு, கூறைநாடு, கன்னாரத் தெரு வழியாக சின்னக்கடை வீதியை ஊர்வலம் வந்தடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.