திருவாரூரில் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தினர்.
டிராக்டர் ஊர்வலம்
மத்திய அரசு, மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்திரவாதம் செய்யவேண்டும். டெல்லி போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவிடம் அமைத்து, அவர்களின் குடும்பத்தினருக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர் ஊர்வலம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்ற டிராக்டர் ஊர்வலத்தை செல்வராஜ் எம்.பி. தொடங்கி வைத்து டிராக்டரில் பயணம் மேற்கொண்டார்.
இந்த ஊர்வலம் துர்காலயா சாலை, நகராட்சி, தெற்கு வீதி பனகல் சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக புதிய ெரயில் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.
பேட்டி
முன்னதாக செல்வராஜ் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஐக்கிய முன்னணியின் சார்பில் டெல்லியில் ஒரு ஆண்டுக்கும் மேல் போராட்டத்தை நடத்தியது.
அந்த போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு தன்னுடைய நிலையில் இருந்து மாற்றிக்கொண்டு 3 சட்டங்களையும் திரும்ப பெறுவதாகவும், உத்தரவாதம் அளித்தது. அதன் அடிப்படையிலே டெல்லியில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஏமாற்றுகிறது
ஆனால் இதுவரை மத்திய அரசு அதற்கான சட்டம் இயற்றுவதற்கான முன் வடிவையோ, எந்த தடயங்களை அறிவிக்காமல் இருப்பது விவசாயிகளை ஏமாற்றுவதாக அமைந்திருக்கிறது. எனவே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இந்த போராட்டங்களை நடத்தி வருகிறது என்றார்.
இந்த ஊர்வலத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ., மாநில விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் நடராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பு சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்,