விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசின் திட்ட வரைவு பற்றி விவாதிக்க முடிவு செய்துள்ள காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவை கண்டித்தும் மயிலாடுதுறையில் கம்யூனிஸ்டு கட்சிகளின் விவசாய சங்கங்களின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், அனைத்து இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கபிரியேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நீதிசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்களது கைகளில் கட்சிக்கொடி மற்றும் கருப்புக் கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.