ஏரி மண் கொள்ளையை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏரி மண் கொள்ளையை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாய பாசன ஏரிகளில் அரசு விதிமுறைகளை மீறி மண் கொள்ளை நடப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், திண்டிவனம் தாலுகா மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டு ஏரியில் அரசு விதிமுறைகளை மீறி கனிமவளங்களை தொடர்ந்து கொள்ளையடிப்பதை தடுக்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தாண்டவராயன், மாவட்ட பொருளாளர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர் அபிமன்னன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கெஜமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கமலக்கண்ணன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.