வனத்துறையினர் நடத்திய கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


வனத்துறையினர் நடத்திய கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x

விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்பகப்படவில்லை என்று கூறி பேரணாம்பட்டில் வனத்துறையினர் நடத்திய கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.

வேலூர்

விழிப்புணர்வு கூட்டம்

பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் உள்ள வன ஓய்வு விடுதி அருகில் உள்ள திருமண மண்டபத்தில், பேரணாம்பட்டு வனத்துறை சார்பில் வன விலங்குகளிடம் விவசாயிகள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று வேலூர் உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன் பேசுகையில் வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் பிரச்சினைகளை விவசாயிகளாகிய நீங்கள் கூறினால் நாங்கள் தீர்வு காண்கிறோம் என தெரிவித்தார். இதற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் கடந்த ஒரு வருடமாக வன விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளை சொல்லி வருகிறோம். இதுவரை வனத்துறை தீர்வு காணவில்லை.

பொய் வழக்கு

மேலும் நாங்கள் ஆர்பாட்டம் வாயிலாகவும், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திலும் அரசிற்கு தெரியபடுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலூர் மாவட்ட கள ஆய்வு கூட்டத்திற்கு வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினோம்.

சைரன் பொருத்தியதாக சேராங்கல் சேர்ந்த விவசாயிகள் மோகன் பாபு, அவரது சகோதரர் சபரீஷ் ஆகியோர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்வதாக கூறிய மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் சப்- கலெக்டர் விசாரணைக்கு பின்னர் அரசு வழக்கறிஞருடன் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை செய்து ரத்து செய்வதாக கூறினர்.

வாக்குவாதம்

சப்- கலெக்டர் நடத்திய விசாரணை அறிக்கையில் பொய்யான வழக்கு என்றும், விவசாயிகள் மோகன்பாபு, சபரீஷ் ஆகியோருக்கு சாதகமாகவும் தெரிய வந்த பின்னரும் 6 மாத காலமாகியும் ரத்து செய்யவில்லை என வலியுறுத்தினார்.

இதற்கு உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஒன்றும் செய்வதற்கில்லை என தெரிவித்ததலால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநடப்பு

இதுநாள் வரை விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாததாலும், தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதாகவும், இந்த கூட்டத்தால் எந்த பயனுமில்லை எனக்கூறி மாநில பொதுச்செயலாளர் உதயகுமார், மாநில அமைப்பு செயலாளர் ராம்தாஸ், மாநில போராட்ட குழு தலைவர் ரகுபதி, ஒன்றிய விவசாய சங்க பிரதிநிதிகள் செந்தில்குமார், மோகன் பாபு உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தை புறக்கணிப்பு செய்வதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் 22 கிராமங்களை சேர்ந்த வனக்குழு தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களை வைத்து கூட்டத்தை நடத்தி முடித்தனர். கூட்டத்தில் வனசரகர்கள் பேரணாம்பட்டு சதீஷ்குமார், குடியாத்தம் வினோபா, வனவர்கள் அண்ணாமலை, இளையராஜா, சரவணன், தயாளன் மற்றும் வனகாப்பாளர்கள், வன காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story