சிறு, குறு விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும்
சிறு, குறு விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சேதுபாவாசத்திரம்,
சிறு, குறு விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விவசாயிகள் சங்க கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றிய கூட்டம் ரெட்டவயலில் நடந்தது. கூட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வீ.கருப்பையா தலைமை தாங்கினார்.ஒன்றியப் பொறுப்பாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் வி.நீலகண்டன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவரும், கரும்பு விவசாயிகள் சங்க பொது செயலாளருமான டி.ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடன் வழங்க வேண்டும்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில், கரும்புவிவசாயிகளுக்கு அரசு அறிவித்த தள்ளுபடி தொகையை, வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். கடன் கேட்டு விண்ணப் பித்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு கடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.சேதுபாவாசத்திரம் கடைமடை பாசனப் பகுதி என்பதால், காவிரி நீரை நேரடியாக ஏரி, குளங்களுக்கு திருப்பி நீர் நிரப்ப வேண்டும்.சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். வேளாண் துறை மூலம் வழங்கப்படும் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், உபகரணங்கள் வெளிப்படைத் தன்மையோடு, அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.