நிலக்கடலை செடிகளை காப்பாற்ற தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்


நிலக்கடலை செடிகளை காப்பாற்ற தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நிலக்கடலை செடிகளை காப்பாற்ற விவசாயிகள் தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நிலக்கடலை செடிகளை காப்பாற்ற விவசாயிகள் தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

நிலக்கடலை சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதியில் விவசாயமும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, பயறு வகைகள், செங்கரும்பு, சீனிக்கரும்பு, வாழை, நிலக்கடலை, எள், சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, ஆகியவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது காழியப்பநல்லூர், ஆணைக்கோவில், பத்துக்கட்டு, உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பத்துக்கட்டு கிராம பகுதியில் மணல் பாங்கான இடத்தில் ஆண்டுதோறும் நிலக்கடலை சாகுபடி பணி நடைபெற்று வருகிறது.

மானிய விலையில் விதை

இதுகுறித்து முன்னோடி விவசாயி பிரபாகரன் கூறுகையில்:- நிலக்கடலையை பொருத்தவரை விவசாயிகள் கார்த்திகை, சித்திரை, ஆடி ஆகிய மூன்று பட்டங்களாக பிரித்து சாகுபடி செய்து வருகின்றனர். சித்திரை ஆடி பட்டம் இரவை சாகுபடியாகவும், கார்த்திகை பட்டம் மானாவரி சாகுபடியாகவும் செய்து வருகின்றனர்.

மூன்று பட்டங்கள் நிலக்கடலை சாகுபடி செய்வதால் தமிழ்நாடு அரசு நுண்ணூட்டச்சத்து, ஜிப்சம் தரமான சான்று அளிக்கப்பட்ட நிலக்கடலை விதைகள் மானிய விலையில் வழங்க வேண்டும்.

வெயிலின் தாக்கம்

தற்போது கோடை தொடங்குவதற்கு முன் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நிலக்கடலை செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கி வருகிறது. நிலக்கடலை செடிகளை காப்பாற்ற நிலத்தடி நீரை பயன்படுத்தி தெளிப்பான் மூலம் தண்ணீரை நிலக்கடலை செடிக்கு பாய்ச்சி வருகிறோம்.

வெயில் கடுமையாக இருப்பதால் பூக்கள் கருகி மகசூல் குறைந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

காழியப்பநல்லூர் ஊராட்சி பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுப்படியை நம்பி உள்ளனர். நிலக்கடலையை கொள்முதல் செய்ய மதுரை, சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கடலை மிட்டாய், சாக்லேட் மற்றும் ஆயில் மில் உரிமையாளர்கள், வியாபாரிகள் நிலக்கடலை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்ட பகுதிக்கு வருகின்றனர். அவர்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால் விரைவில் இப்பகுதியில் நிலக்கடலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்து அரசு மூலம் கொள்முதல் செய்தால் எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறினார்.


Next Story