குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபடும் விவசாயிகள்
மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த விவசாயிகள், குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 50 சதவீத மானிய விலையில் விதை நெல், உரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கொரடாச்சேரி:
மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த விவசாயிகள், குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 50 சதவீத மானிய விலையில் விதை நெல், உரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேட்டூர் அணை திறப்பு தேதி அறிவிப்பு
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் ஆற்றுப்பாசனத்தை நம்பியும், 20 சதவீதம் ஆழ்துளை கிணற்று தண்ணீரை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறுவை சாகுபடி பணி தீவிரம்
தற்போது வழக்கம் போல் மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மானிய விலையில் விதை நெல், உரம்
குறுவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடும் வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் மிகப் பெரிய அளவில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.
வேளாண் கடன்
திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும். ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும். சிறு, குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். மேலும் நிபந்தனை இல்லாமல் வேளாண் கடன்கள் வழங்க வேண்டும். இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.