பொங்கல் கரும்புகள் சாகுபடியில் ஆர்வமில்லாத விவசாயிகள்
கடந்த ஆண்டு சாகுபடி செய்த பொங்கல் கரும்புகள் விலை வீழ்ச்சி மற்றும் தேக்கம் அடைந்ததால் இந்த ஆண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் விதை கரும்புகளும் தேக்கம் அடைந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர்
கடந்த ஆண்டு சாகுபடி செய்த பொங்கல் கரும்புகள் விலை வீழ்ச்சி மற்றும் தேக்கம் அடைந்ததால் இந்த ஆண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் விதை கரும்புகளும் தேக்கம் அடைந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.
பொங்கல் கரும்புகள்
தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் பொங்கல் கரும்புகள் மட்டும் 1000 ஏக்கர் வரை சாகுபடி செய்யப்படுகின்றன. இது தவிர சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்கான கரும்புகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
பொங்கல் கரும்புகள் ஒவ்வொரு ஆண்டு சித்திரை, வைகாசி மாதங்களில் சாகுபடி செய்யப்படும். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை, துறையூர், மடிகை, திருக்காட்டுள்ளி, பூதலூர், திருவோணம் பகுதிகளிலும் கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும். இதில் காவிரி கரையோரமான திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளையும் கரும்புகள் நன்றாக வளர்ச்சி அடைந்து காணப்படும்.
விதை கரும்புகள்
இந்த ஆண்டு தற்போது பொங்கல் கரும்புகள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் விதை கரும்புகளும் ஆங்காங்கே தேக்கம் அடைந்துள்ளன. தஞ்சை மன்னார்குடி சாலையில் விதை கரும்புகள் விற்பனை எனவும் விவசாயிகள் விதை கரும்பு தேவைப்படுவோர் அணுகவும் என செல்போன் எண்களை எழுதி அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.
இருப்பினும் விதை கரும்புகள் வாங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் ஆங்காங்கே விதை கரும்புகளும் தேக்கம் அடைந்துள்ளன. 1000 விதை கரும்புகள் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு முழு நீள கரும்பில் 7 முதல் 10 விதை கரும்புகள் வரை வெட்டுகின்றனர். தற்போது விதை கரும்புகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.
விலை வீழ்ச்சியால் ஆர்வமில்லை
இந்த விதை கரும்புகள் நடவுப்பணி ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும். சித்திரை மாதம் தொடக்கத்தில் இருந்து கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை கரும்புகளை வாங்கி செல்கிறார்கள். ஆனால் கடந்த ஆண்டு விலை வீழ்ச்சி மற்றும் வயல்களில் தேக்கம் அடைந்ததால் இந்த ஆண்டு விதை கரும்புகள் வாங்க விவசாயிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில விவசாயிகளே வந்து விதை கரும்புகளை வாங்கிச்சென்றுள்ளனர்.
இது குறித்து சூரக்கோட்டையை சேர்ந்த கரும்பு விவசாயி வரதன் கூறுகையில், கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பொங்கல் கரும்புக்கு நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. இதனால் கடந்த ஆண்டு கரும்பு விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்தனர். தஞ்சையை அடுத்த சூரக்கேட்டை, மன்னார்குடி சாலையில் ஏராளமான ஏக்கரில் பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால் விலை வீழ்ச்சி அடைந்ததாலும், வயல்களில் பொங்கல் கரும்புகள் தேக்கம் ஏற்பட்டதாலும் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். இதனால் இந்த ஆண்டு பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
மழையால் சாய்ந்துள்ளன
இதனால் விதை கரும்புகள் சாகுபடி செய்யப்படும் வயல்களில் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் தற்போது பெய்த மழையினால் கரும்புகள் சாய்ந்துள்ளன. விதை கரும்புகள் விற்பனை ஆகாததாலும், சாய்ந்துள்ளதாலும் என்ன செய்வது என்று தெரிய வில்லை. விவசாயிகள் யாரும் வாங்காவிட்டால் இதனை தீ வைத்து கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை.என்றார்.