கால்வாய்களை தூர்வாரிய விவசாயிகள்
ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல கால்வாய்களை விவசாயிகள் தூர்வாரினர்.
வாணாபுரம்
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குங்கிலியநத்தம், பெருந்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஏரிகளுக்கு செல்லும் கிளை கால்வாய்கள் உள்ளன.
இந்த கால்வாய்கள் செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுவதால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. மேலும் கால்வாயின் அருகில் விவசாய நிலம் இருப்பதால் நிலங்களுக்கு தண்ணீர் சென்று விடுகிறது.
இதனால் விவசாயிகள் நெற்பயிர்களைஅறுவடை செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கொட்டையூர் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் பெருந்துறைப்பட்டு வழியாக செல்கிறது. இந்த கால்வாய் முழுவதும் செடி, கொடிகள் மற்றும் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது.
இதையடுத்து கடந்த சில தினங்களாக விவசாயிகளை கால்வாய்களை தூர்வாரி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும்பாலான ஏரிகளுக்கு வரும் கிளை கால்வாய்கள் முழுவதும் சேதம் ஏற்பட்டு இருப்பது மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் கால்வாய்கள் சில இடங்களில் காணவில்லை. இதனால் ஒரு ஏரி நிறைந்த பிறகு மற்றொரு ஏரிக்குக் செல்ல வழி இல்லாமல் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் சென்று விடுகிறது.
இதனால் பயிர்கள் சேதம் ஏற்படுகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் பணியாளர்கள் இதுபோன்ற கால்வாய்களை சீரமைக்க வேண்டும்
. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தேசிய வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களை கொண்டு கால்வாய்களை தூர்வாரி சீரமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.