தேயிலை தோட்டங்கள் பராமரிப்பை கைவிட்ட விவசாயிகள்


தேயிலை தோட்டங்கள் பராமரிப்பை கைவிட்ட விவசாயிகள்
x

நீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சியால் வருவாய் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தேயிலை தோட்டங்கள் பராமரிப்பதை கைவிட்டு உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

நீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சியால் வருவாய் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தேயிலை தோட்டங்கள் பராமரிப்பதை கைவிட்டு உள்ளனர்.

விலை வீழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பிரதான விவசாயமாக தேயிலை விளைச்சல் நடைபெறுகிறது. தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேயிலை விவசாயம் இருந்து வந்தது. உலக வர்த்தக கொள்கையில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது.

அதன்பின்னர் தேயிலை விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இதன் விளைவாக பச்சை தேயிலை விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட பச்சை தேயிலை கிலோ ரூ.25 வரை விலை கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் படிப்படியாக விலை குறைந்து வருகிறது. தற்போது கூட்டுறவு தொழிற்சாலைகளில் கிலோ ரூ.10 எனவும், தனியார் தொழிற்சாலைகளில் ரூ.9 ஆக நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

பராமரிக்காத விவசாயிகள்

இதனால் தேயிலை விவசாயத்தில் போதிய வருவாய் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தோட்டங்களை பராமரிக்க முடியாமல் கைவிட்டு உள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான தோட்டங்களில் தேயிலை செடிகளுக்கு இடையே புதர்கள் வளர்ந்து காடுகள் போல் காணப்படுகிறது. இதன் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை கிடைப்பதில்லை. தோட்டங்களை நிர்வகித்து வருவதால் வேறு பிழைப்புக்கு என்ன செய்வது என தெரியாமல் பராமரிக்கப்பட்டது. இதனிடையே உர விலை, கூலி தொழிலாளர்களின் சம்பளம், போதிய விலை கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பச்சை தேயிலைக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பு கானல் நீராகவே உள்ளது. இதனால் தோட்டங்களை பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story