மாடுகளுக்கு தீவனமாக கரும்பு தோகையை வழங்கும் விவசாயிகள்


மாடுகளுக்கு தீவனமாக கரும்பு தோகையை வழங்கும் விவசாயிகள்
x

பாபநாசம் தாலுகாவில் வைக்கோல் தட்டுப்பாடு உள்ளதால் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளுக்கு தீவனமாக கரும்பு தோகையை வழங்கி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

பாபநாசம்

பாபநாசம் தாலுகாவில் வைக்கோல் தட்டுப்பாடு உள்ளதால் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளுக்கு தீவனமாக கரும்பு தோகையை வழங்கி வருகிறார்கள்.

டெல்டாவில் நெல் சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறுவை நெல் சாகுபடிக்கு பயன்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதபோது விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. குறுவையை தொடர்ந்து சம்பா, தாளடி நெற்பயிருக்கு மழைநீர் மற்றும் மேட்டூர் அணையில் இருந்து ஆறுகளில் திறந்து விடப்படும் தண்ணீர் கைகொடுத்து வருகிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்குப்பருவ மழை விவசாயத்துக்கு கைகொடுக்கிறது. இந்த மாதங்களில் அதிகமாக மழை பெய்யும்போது பாதிப்பும் ஏற்படுகிறது.

பருவம் தவறி மழை

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) இறுதியில் டெல்டாவில் கனமழை பெய்தது. இதனால் குறுவை நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு (2023) கடந்த 1-ந் தேதி முதல் 4 நாட்கள் வழக்கத்துக்கு மாறாக பருவம் தவறி மழை பெய்தது. பரவலாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தாயராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து, நெல் மணிகள் வயலிலேயே முளைத்தன. தற்போது மழை ஓய்ந்து விவசாயிகள் அறுவடை பணிகளை மெல்ல, மெல்ல மேற்கொண்டு வருகிறார்கள்.

அறுவடை பாதிப்பு

வயலில் உள்ள ஈரப்பதம் காரணமாக எந்திரம் மூலமாக அறுவடை செய்வது சிரமமாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். கனமழையால் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

விவசாய நிலங்களில் இன்னும் ஈரப்பதம் காயவில்லை. பல பகுதிகளில் அறுவடை பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வைக்கோல் கிடைக்கவில்லை

அறுவடை நடைபெறாததால் தற்போது வைக்கோல் கட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுவாக அறுவடை நேரங்களில் வைக்கோல் அதிகமாக கிடைக்கும். அதை விற்பனை செய்ததன் மூலமாகவும் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும் மழையில் சாய்ந்து மகசூல் ஏற்பட்டதுடன், வைக்கோலும் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

கரும்பு தோகை

அத்துடன் கால்நடைகளுக்கு தேவையான தீவமான வைக்கோலும் கிடைக்கவில்லை என கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் கவலையுடன் கூறுகிறார்கள்.

பாபநாசம் பகுதியில் வைக்கோல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்கும் விதமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு கரும்பு தோகையை தீவனமாக வழங்கி வருகிறார்கள்.


Next Story