கொட்டும் மழையிலும் விதைநெல் தெளிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்


கொட்டும் மழையிலும் விதைநெல் தெளிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
x

கொட்டும் மழையிலும் விதைநெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

திருச்சி

திருவெறும்பூர்:

விவசாயம்

மனிதர்களின் இன்றியமையாத ேதவைகளில் முக்கியமானது உணவு. அதனை அளிப்பதில் விவசாயிகள் முக்கிய பங்காற்றுகிறார்கள். உழவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்று கூறப்படுவது உண்டு. அதற்கேற்ப விவசாயிகள் மழை, வெயில் பாராது உழைத்து, பயிர்களை விளைவிக்கின்றனர். இந்நிலையில் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அவர்கள் விவசாய பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக ெகாண்டுள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து மாயனூர் அணை வழியாக உய்யகொண்டான் வாய்க்காலில் வரும் நீரானது, திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

மழையிலும் பணி

மேலும் தற்போது உய்யகொண்டான் வாய்க்காலில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில் கிளியூர், நடராசபுரம், பத்தாளப்பேட்டை, வேங்கூர், கூத்தைப்பார், அரசங்குடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உழவுப்பணி, விதைநெல் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி திருவெறும்பூர் பகுதியில் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று பத்தாளப்பேட்டை ஊராட்சியில் மேலமங்காவனம் பகுதியில் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல், ஊறவைத்த விதை நெல்மணிகளை நாற்றங்காலில் தெளித்து விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.


Next Story