நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை


நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை
x

வடகாட்டில் முன் அறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை

வடகாடு:

நெல் கொள்முதல் நிலையம் மூடல்

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு பாசனம் மூலமாக, ஆண்டு முழுவதும் ஒரு சில பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கோடைக்கால குறுவை நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் நெல் சாகுபடி பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வடகாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் விவசாயிகளது கோரிக்கையை தொடர்ந்து இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் எந்த அறிவிப்புமின்றி கடந்த இரு வாரங்களாக மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது.

இதனால் நெல் அறுவடை பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதிகளில் குறைந்த அளவிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் தற்போது அவையும் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

ஒருசில விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளை அறுவடை செய்து வரும் நிலையில், நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டு இருப்பதால் நெல் மணிகளை என்ன செய்வது என்று தெரியாமல் குறைந்த விலைகளில் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் சில விவசாயிகள் கோழிகள் கூட தின்று விட்டு போகட்டுமே என்று இருந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு குறைந்த பட்சமாக 10 தினங்களுக்கு முன்பாகவாவது அறிவித்து இருந்தால் அதற்கு ஏற்ற வகையில் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு தேவையான நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். இப்படி திடீரென நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.


Next Story