பொதுமக்கள் உண்ணாவிரதம்
அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சியில் உள்ள சாய்கார்டன், வாரி கார்டன், கிரீன்பீல்டு அக்வா அவென்யூ பகுதியில் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதி செய்து தரக்கோரி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செம்பியநல்லூர் ஊராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். ஊராட்சி நிர்வாகத்தைகண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில் குடியிருப்போர் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
60 குடும்பத்தினர் அங்கீகாரம் பெற்று வீடு கட்டி இருப்பதாகவும், ஆனால் தார்ச்சாலை, குடிநீர், சாக்கடை வாராங்கால் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி இல்லை என்றும், எனவே அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். புதர்களை அகற்ற வேண்டும். சாக்கடை நீர் குட்டைபோல் தேங்கி சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கழிவு நீரை அகற்ற வேண்டும். குடிநீருக்காக பல மைல் தூரம் அலைய வேண்டியுள்ளது. குடிநீர் குழாய் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயகுமார், ஊராட்சி மன்றத்தலைவர் சுதா வேல்முருகன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடியவிரைவில் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.