குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதம்


குவாரியை மூடக்கோரி  உண்ணாவிரதம்
x

மணல்மேடு அருகே பொன்வாசநல்லூர் கிராமத்தில் தொடங்கப்பட்ட சவுடுமண் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மணல்மேடு

மயிலாடுதுறை அருகே உள்ள பொன்வாசநல்லூர் கிராமத்தில் உரிய அனுமதியின்றி தனது வயலில் தனிநபர் ஒருவர் சவுடுமண் குவாரியை தொடங்கி பலஅடி ஆழத்திற்கு சவுடுமண்ணை அள்ளி வருவது தெரிய வந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கேட்டதற்கு குளம் தூர்வார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் நிறுத்தப்பட்டு விடும் என்று பதில் கூறியுள்ளனர். ஆனால், தொடர்ந்து சவுடு மண் அள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

உண்ணாவிரதம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சவுடுமண் குவாரியை மூடக்கோரியும், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரியும், விளைநிலங்களை பாதுகாத்திட கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் மயிலாடுதுறை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சாமி சீசர் தலைமை தாங்கினார். இதில் கடலங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமோகன், ஒன்றிய பொறுப்பாளர் பாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள், அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விட்டு சவுடு மண் குவாரிக்கு அனுமதி அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரியை உடனடியான மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அதற்கு குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் உண்ணாவிரதத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story