அம்மாபேட்டை அருகே வேன்-லாரி மோதல்; டிரைவர்-கிளீனர் உடல் நசுங்கி சாவு


அம்மாபேட்டை அருகே வேனும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவரும், கிளீனரும் உடல் நசுங்கி செத்தனர்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே வேனும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவரும், கிளீனரும் உடல் நசுங்கி செத்தனர்.

வேன்-லாரி

கர்நாடக மாநிலம் டுங்பூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை டுங்பூர் ஹோஸ்பேட், ஹூப்ளி தாலுகா பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவர் மகன் ஹரீஷ்குமார் (வயது 26) ஓட்டினார். அவருடன் பெங்களூரு பசவேஸ்வரா, சிவனஹள்ளி பகுதியை சேர்ந்த நாகப்பா என்பவர் மகன் மஞ்சுநாத் (27) கிளீனராக இருந்தார்.

அதேபோல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து லாரி ஒன்று தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு ஆந்திரா சென்று கொண்டு இருந்தது. லாரியை தர்மபுரி மாவட்டம் ஈசல்பட்டி பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (32) என்பவர் ஓட்டி வந்தார்.

2 பேர் நசுங்கி சாவு

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள அம்மாபேட்டை கோம்பூர் பள்ளம் அருகே சென்றபோது ஹரீஷ்குமார் ஓட்டி சென்ற சரக்கு வேனும், கருணாகரனின் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 2 வாகனங்களின் முன்பகுதியும் நொறுங்கி சேதம் அடைந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி ஹரீஷ்குமார், மஞ்சுநாத் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லாரி டிரைவர் கருணாகரன் படுகாயம் அடைந்தார்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு சரக்கு வேனும், லாரியும் மீட்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இறந்த 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கருணாகரன் பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த விபத்தால் பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story