ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் -பஸ் மோதல்: கல்லூரி பேராசிரியர் பரிதாப சாவு
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் -பஸ் மோதல்: கல்லூரி பேராசிரியர் பரிதாப சாவு
ஈரோடு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மூலப்பள்ளிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிவண்ணன் (வயது 33). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் வாரத்துக்கு ஒரு முறை ராசிபுரத்திற்கு சென்று வருவது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் ராசிபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று மீண்டும் கல்லூரிக்கு ராசிபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஈரோடு நோக்கி மணிவண்ணன் வந்து கொண்டிருந்தார்.
ஈரோடு வண்ணாங்காட்டுவலசு பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ், மணிவண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.