வெள்ளோடு அருகே விபத்தில் கார் மெக்கானிக் பலி; உறவினர்கள் சாலை மறியல்
வெள்ளோடு அருகே விபத்தில் கார் மெக்கானிக் பலியானார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
பெருந்துறை
வெள்ளோடு அருகே விபத்தில் கார் மெக்கானிக் பலியானார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
கார் மெக்கானிக்
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்துள்ள கனகபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). கார் மெக்கானிக். இவரும், இவருடைய உறவினர் வினோத் என்பவரும் நேற்று காலை கனகபுரத்திலிருந்து வெள்ளோட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை வினோத் ஓட்ட, அவருக்கு பின்புறமாக பிரகாஷ் உட்கார்ந்ந்து இருந்தார்.
ஸ்கூட்டர், வெள்ளோடு ராஜா கோவில் அருகே வந்த போது, எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரிலிருந்து தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் படுகாயம் அடைந்தார். உடனே அவர் பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரகாஷ் இறந்து விட்டதாக கூறினார்கள். ஸ்கூட்டரை ஓட்டி வந்த வினோத் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
உறவினர்கள் போராட்டம்
இந்த விபத்து பற்றி தகவலறிந்த பிரகாஷின் உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு திரண்டு வந்து, விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மருத்துவமனை எதிரே செல்லும் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் நேற்று மாலை 3 மணியிலிருந்து 3.15 மணி வரை 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர்கள் மசூதாபேகம் (பெருந்துறை), சரவணன் (சென்னிமலை), ஜெயமுருகன் (அறச்சலூர்) சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், உத்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
டிரைவர் கைது
பேச்சு வார்த்தையில், விபத்துக்கு காரணமான கார் டிரைவர் கைது செய்யப்பட்டு, அவர் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதையடுத்து, போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இறந்து போன பிரகாஷூக்கு, சாந்தி (30) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.