கொடுமுடி அருகே பரிதாபம்: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவர் சாவு


கொடுமுடி அருகே பரிதாபம்: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவர் சாவு
x

கொடுமுடி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பள்ளிக்கூட மாணவர்

கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் வசித்து வருபவர் பொன் கதிரேசன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரி என்ற ஊரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அவருடைய மனைவி உமா மகேஸ்வரி. இவர் கரூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் பொன் வெற்றி தமிழ் (வயது 10).

இவர் கொடுமுடி அருகே பள்ளக்காட்டூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் வெங்கமேட்டில் இருந்து நாகம்மநாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில் பொன் வெற்றி தமிழ் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சாவு

அப்போது சைக்கிளும், எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பொன் வெற்றி தமிழ் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் அவரது தலை டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.

இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பொன் வெற்றி தமிழை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு பொன் வெற்றி தமிழ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story