பவானி ஜம்பையில் பெயர் பலகையில் மோட்டார்சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு; தீபாவளி கொண்டாட வந்தவருக்கு நேர்ந்த சோகம்


பவானி ஜம்பையில் பெயர் பலகையில் மோட்டார்சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு; தீபாவளி கொண்டாட வந்தவருக்கு நேர்ந்த சோகம்
x

பவானி ஜம்பையில் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்த என்ஜினீயர் பெயர் பலகையில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இறந்தார்.

ஈரோடு

பவானி

பவானி ஜம்பையில் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்த என்ஜினீயர் பெயர் பலகையில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இறந்தார்.

என்ஜினீயர்

பவானியை அடுத்த ஜம்பை மாரியம்மன் கோவில் வீதியில் டீக்கடை நடத்தி வருபவர் அம்மாசை. இவருடைய மகன் விமல் (வயது 19). டிப்ளமோ என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு மோட்டார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட விமல் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஜம்பை அருகே உள்ள வைரமங்கலத்தில் வசிக்கும் தன் நண்பர் பிரவீன் என்பவரை பார்ப்பதற்காக விமல் மோட்டார்சைக்கிளில் சென்றார்.

தலையில் படுகாயம்

நண்பரை சந்தித்த பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். ஜம்பை கோம்புகரடு பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் சாலையோரம் இருந்த பெயர் பலகையில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விமலுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

பெரும் சோகம்

உடனே சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் விமலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விமல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்த என்ஜினீயர் விபத்தில் பலியானது அவருடைய உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story