சத்தியமங்கலம் அருகே பரிதாபம்: வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு


சத்தியமங்கலம் அருகே பரிதாபம்: வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
x

சத்தியமங்கலம் அருகே வேன்-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே வேன்-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

வங்கி ஊழியர்

சத்தியமங்கலம் தோப்பூர் காலனியை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் ரகுபதி (வயது 27). ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (24). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் சத்தி- பண்ணாரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள்.

2 பேர் பலி

வடவள்ளி அருகே சென்றபோது ரோட்டு ஓரம் நின்றுகொண்டிருந்த சரக்குவேன் மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட ரகுபதியும், சதீஷ்குமாரும் படுகாயம் அடைந்தார்கள். இதில் ரகுபதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். சதீஷ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார்.

விசாரணை

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இறந்த ரகுபதிக்கு தீபா என்ற மனைவியும், எஸ்வந்த் என்ற 7 வயது மகனும் உள்ளனர். சதீஷ்குமார் திருமணம் ஆகாதவர்.

பலியான 2 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story