அந்தியூர் அருகே பரிதாபம்: மோட்டார்சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல்; கல்லூரி மாணவர் சாவு- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


அந்தியூர் அருகே பரிதாபம்: மோட்டார்சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல்; கல்லூரி மாணவர் சாவு- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

அந்தியூர் அருகே மோட்டார்சைக்கிளும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே மோட்டார்சைக்கிளும், சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து

அந்தியூர் அருகே உள்ள பட்லூர் காளிபட்டி காலனியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் ஜெயபிரதீப் (வயது 18). இவர் சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கோகுல் (18). இவர் ஜெயபிரதீபின் நண்பர் ஆவார்.

இந்த நிலையில் ஜெயபிரதீபை பார்க்க அவரது வீட்டுக்கு கோகுல் நேற்று முன்தினம் சென்றுள்ளார். அதன்பின்னர் மாலையில் கோகுலை அவரது வீட்டில் விடுவதற்காக ஜெயபிரதீப் மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார். வெள்ளித்திருப்பூர் கலைமகள் காலனி ஓம் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

சாவு

இந்த விபத்தில் ஜெயபிரதீபும், கோகுலும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது ஜெயபிரதீபை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் கோகுலை மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயபிரதீபின் உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல்

இந்த நிலையில் இறந்த ஜெயபிரதீப்பின் உறவினர்கள் சிலர் நேற்று மதியம் டாக்டர்களிடம் சென்று ஜெயபிரதீபின் உடலை உடனே பிரேத பரிசோதனை செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். அதற்கு டாக்டர்கள் அவர்களிடம் கூறும்போது, 'போலீசார் விசாரணை நடத்தி விபத்து சம்பந்தமான அறிக்கையை எங்களிடம் கொடுத்தால் தான் உடலை பிரேத பரிசோதனை செய்ய தொடங்குவோம்' என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபிரதீபின் உறவினர்கள் மதியம் 1.50 மணி அளவில் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள அந்தியூர்-பர்கூர் ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் 'விபத்து சம்பந்தமான விசாரணை அறிக்கையை டாக்டர்களிடம் வழங்குகிறோம். அதன்பின்னர் ஜெயபிரதீபின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து உங்களிடம் ஒப்படைப்பார்கள்' என்று கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட ஜெயபிரதீபின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை அறிக்கையை டாக்டரிடம் வழங்கினர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story