பவானி அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தந்தை- மகள் பலி; கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்


பவானி அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர்.

ஈரோடு

பவானி

பவானி அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர்.

விசைத்தறி உரிமையாளர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முதலியார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுடைய மகள் சிவ நந்தினி (17), மகன் அனிருத் (15). இதில் சிவ நந்தினி குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போதுதான் பொதுத்தேர்வு எழுதி முடித்து உள்ளார். அனிருத் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மரத்தில் மோதியது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள குலதெய்வ கோவிலான பத்ரகாளியம்மன் கோவிலுக்கு கந்தசாமி, நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் மோட்டார்சைக்கிளில் நேற்று சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மோட்டார்சைக்கிளில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

பவானியை அடுத்த காடையாம்பட்டி அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

தந்தை- மகள் சாவு

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நிர்மலாவும், சிவ நந்தினியும் கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் செல்லும் வழியிலேயே சிவ நந்தினி பரிதாபமாக இறந்தார்.

நிர்மலா ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இறந்த கந்தசாமி, சிவ நந்தினி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story