குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தந்தை-மகள் தற்கொலை; தாய்க்கு தீவிர சிகிச்சை
குற்றாலத்தில் தனியார் தங்கும் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்டனர். தாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர கிசிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் முடிந்த போதிலும் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருகிறார்கள். கடந்த 30-ந்தேதி தந்தை, தாய், மகள் என்று 3 பேர் குற்றாலத்துக்கு வந்து அண்ணா சிலை அருகில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அவர்கள் கடந்த 4 நாட்களாக அருவிக்கு சென்று குளித்து வந்தனர்.
நேற்று காலையில் அவர்கள் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய ஊழியர் ஒருவர் சென்றார். அப்போது அறையின் கதவு பூட்டப்படாமல் இருந்தது. அவர் சத்தம் கொடுத்து வெகுநேரம் ஆகியும் உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தந்தை, தாய், மகள் என 3 பேரும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை பார்த்து அந்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். உடனே குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், அந்த 3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இருந்ததும், அவர்களில் தந்தை மகாலிங்கம் (55), மகள் தனப்பிரியா (28) ஆகியோர் இறந்ததும், தாய் காமாட்சி (45) உயிருக்கு போராடியபடி கிடந்ததும் தெரியவந்தது. காமாட்சியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகாலிங்கம், தனப்பிரியா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவர்கள் விடுதியில் திருநகர், மதுரை என்ற முகவரியை கொடுத்து தங்கியிருந்தனர். அந்த முகவரியில் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் தற்போது அங்கு வசிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால் இறந்தவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டனர்? என்பன போன்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காமாட்சி இயல்பு நிலைக்கு திரும்பினால் தான் விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் குற்றாலம் போலீஸ் நிலையத்தை 04633 283137 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.