தாமிரபரணி ஆற்றில் குளித்த தந்தை-மகள் நீரில் மூழ்கி பலி
விக்கிரமசிங்கபுரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த தந்தை-மகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த இலங்கையைச் சேர்ந்த தந்தை-மகள் நீரில் மூழ்கி பலியானார்கள்.நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூரில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த துவான் மகன் இர்பான் முகம்மது (வயது 34) என்பவர் தனது மனைவி ஜூட்மேரிசுசி, மகள்கள் இஷானா (8), இஷ்ரா (5) ஆகியோருடன் கடந்த மாதம் ஆலடியூருக்கு வந்தார். கடந்த 1 மாதமாக இங்கே தங்கி இருந்த இர்பான் முகம்மது பெயிண்டிங் வேலைக்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக இர்பான் முகம்மது தனது குடும்பத்துடன் சென்றார். குளித்துக் கொண்டு இருக்கும்போது சிறுமி இஷானாவை தண்ணீர் இழுத்துச் சென்றது. இதை பார்த்த இர்பான் முகம்மது தனது மகளை காப்பாற்ற முயன்றார். ஆனால் தண்ணீரின் வேகத்தை எதிர்கொள்ள முடியாததால் அவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்து கரையில் நின்ற ஜூட்மேரிசுசி அதிர்ச்சி அடைந்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் இர்பான் முகம்மது, இஷானா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
இதுகுறித்து அம்பை தீயணைப்பு நிலையத்திற்கும், விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி 2 பேரின் உடல்களை தேடினார்கள். அப்போது, இர்பான் முகம்மது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் சிறுமி இஷானாவின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு இடையே இவர்கள் எப்படி தமிழகத்திற்கு வந்தனர். அப்படி உறவினர்களை பார்க்க வந்தால், இர்பான் முகம்மது எதற்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி தந்தை-மகள் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.