மாட்டு வண்டி-மோட்டார் சைக்கிள் மோதல்; தந்தை-மகன் உள்பட 3 பேர் படுகாயம்
கூடலூர் அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை-மகன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கூடலூர் கரிமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சடைசாமி (வயது 70). விவசாயி. நேற்று முன்தினம் இவர், கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய கழுதைமேடுபுலம் பகுதியில் உழவுப்பணிக்காக மாட்டு வண்டியில் சென்றார். பின்னர் அங்கிருந்து மாட்டு வண்டியில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தம்மணப்பட்டி பிரிவு அருகே அவர் வந்தபோது, எதிரே குமுளியில் இருந்து கம்பம் நோக்கி கேரள மாநிலம் குமுளி 2-ம் மைல் பகுதியை சேர்ந்த அமீர் (34) என்பவர் தனது தந்தை இஸ்மாயிலுடன் (70) மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் வந்த அமீரும், அவரது தந்தையும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அதேபோல் மாட்டு வண்டியில் வந்த சடைசாமியும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காயமடைந்த 3 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.