ஆத்தூரில் விபத்து : மகள் கண் எதிரே தந்தை பலி
ஆத்தூரில் நடந்த விபத்தில் மகள் கண் எதிரே தந்தை பலியானார்.
ஆத்தூர்:
முதியவர்
வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 60). இவர் தனது மகள் பிரபாவை ஆத்தூர் உப்பு ஓடையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் குமரேசனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். குமரேசன் தனது குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காதுகுத்தி கிடா விருந்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பங்கேற்க வெங்கடாசலம் மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்றார். பின்னர் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு ஜவுளி துணி எடுத்ததுடன், அவர்களை அனுப்பிவிட்டு மகள் பிரபாவுடன் மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பங்கிற்கு பெட்ரோல் போட வந்தார்.
மோதல்
அப்போது பெத்தநாயக்கன்பாளையத்தில் இருந்து ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவை சேர்ந்த சீனிவாசன் (45) என்பவர் ஒரு ஸ்கூட்டரில் எதிரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வெங்கடாசலம் வந்த மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதியது. இதில் வெங்கடாசலம் ரோட்டின் வலதுபுறம் விழுந்தார்.
அந்தசமயம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு ஆத்தூர் நோக்கி வந்த லாரி வெங்கடாசலம் தலையில் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாகஇறந்தார்.
டிரைவர் கைது
பின்னர் அமர்ந்து வந்த பிரபா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இறந்த வெங்கடாசலத்திற்கு மலர்க்கொடி என்ற மனைவியும், 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மகள் கண் எதிரில் தந்தை பலியான சம்பவம் பற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் பிரகாஷ் (35) கைது செய்யப்பட்டார்.