மாயமான மாணவனை மும்பையில் கண்டுபிடித்து கட்டி தழுவி முத்தமிட்ட தந்தை


மாயமான மாணவனை மும்பையில் கண்டுபிடித்து கட்டி தழுவி முத்தமிட்ட தந்தை
x

திருவாரூரில் இருந்து 1 ஆண்டுக்கு முன்பு மாயமான மாணவனை மும்பையில் தந்தை கண்டுபிடித்து கட்டி தழுவி முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருவாரூர்

திருவாரூரில் இருந்து 1 ஆண்டுக்கு முன்பு மாயமான மாணவனை மும்பையில் தந்தை கண்டுபிடித்து கட்டி தழுவி முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிளஸ்-2 மாணவர்

திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய ஒரே மகன் மாதேஷ்(வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாதேஷ் தனக்கு ஆடை எடுக்க வேண்டும் என்று வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் வாங்கிக்கொண்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவரின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் மறுநாள் வீடு திரும்பினார்.

வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை

இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் படிக்க பிடிக்கவில்லை என்று வீட்டை விட்டு மாதேஷ் வெளியேறினார். அவர் திரும்பி வராததால் திருவாரூர் தாலுகா போலீசில் அறிவழகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் தாலுகா போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மாயமான மாதேசை தேடி வந்தனர். இந்த நிலையில் மாதேசின் தந்தை அறிவழகனின் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் ஒன்று வந்துள்ளது. அதனை திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கண்டுபிடித்தனர்

இந்த ஓ.டி.பி. எண் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்தியபோது அந்த ஓ.டி.பி. எண் மும்பையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்ததால் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, ஏட்டு ஜானி ரஞ்சித் மற்றும் மாதேசின் தந்தை அறிவழகன் ஆகியோர் மும்பை சென்று மாதேசை கண்டுபிடித்தனர்.

கட்டித்தழுவி முத்தமிட்ட தந்தை

அறிவழகன் தனது மகன் மாதேசை கண்டதும் கட்டிப்பிடித்து கதறி அழுதார். ஒரே மகன் சார்... ஒரே மகன் சார்... என்று போலீசாரிடம் புலம்பியபடி அவர் அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

அறிவழகன் மடியில் மாதேஷ் அமர்ந்து கொண்டு அவருக்கு முத்தம் கொடுத்து நீ அழாத அப்பா... அழாத... என்று கூறினார். இந்த வீடியோ அங்கிருந்த ஒருவரால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆதார் கார்டு எடுக்க சென்றதால்....

மாணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாதேஷ் திருவாரூரில் இருந்து பெங்களூரு ரெயிலில் சென்று அங்கிருந்து மும்பை சென்றுள்ளார். அங்கு சேலத்தை சேர்ந்த தொழிலதிபரான கனகவேல் என்பவரிடம் சென்று சேர்ந்த மாதேஷ் தனக்கு தாய், தந்தை யாரும் கிடையாது என்று அவரிடம் கூறியுள்ளார். இதனால் மாதேசை தனது மகன் போல அவர் வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாதேசுக்கு மும்பையில் ஆதார் கார்டு எடுப்பதற்காக பதிவு செய்தபோது அறிவழகன் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.


Next Story