கந்து வட்டி வசூலித்த தந்தை-மகன் கைது
குரோம்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளாக கந்து வட்டி வசூலித்து கொடுமை செய்து வந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.
குரோம்பேட்டை,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை கோதண்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டி நாகூரான் (வயது 65). இவருடைய மகன் கோபி (43). இவர்கள், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வந்தனர்.
இவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குபவர்களிடம் வட்டியும், அசலும் செலுத்தினாலும், பணம் செலுத்தவில்லை எனக்கூறி வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி, வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி பணம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி கந்துவட்டி வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. குட்டி நாகூரான் மீது சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கந்து வட்டி புகார் உள்ளது. பல ஆண்டுகளாக அந்த பகுதியில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இவர்களின் மிரட்டலுக்கு பயந்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்ய தயங்கி வந்தனர்.
பெண் புகார்
இந்த நிலையில் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த கீதா (42) என்பவர் குட்டி நாகூரானிடம் வட்டிக்கு சிறுக சிறுக ரூ.15 லட்சம் வாங்கினார். அதற்கு வட்டியும், அசலுமாக ரூ.35 லட்சம் திருப்பி செலுத்திய பின்னரும் அவரை வீட்டுக்கு வரவழைத்த குட்டி நாகூரான் ரூ.38 லட்சம் தரவேண்டும் என கூறி மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்.
மேலும் நில பத்திரம், கார் பதிவு ஆவணம், வங்கி காசோலைகள் போன்றவற்றையும் மிரட்டி வாங்கினார். அத்துடன் கீதாவுக்கு பணம் வாங்குவதற்காக சாட்சி கையெழுத்து போட்ட குரோம்பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் (44) என்பவர் ரூ.6 லட்சம் தரவேண்டும் என வெள்ளை பேப்பரில் எழுதி மிரட்டி வாங்கினார்.
இதேபோல சானடோரியம் பத்மாவதி தெருவை சேர்ந்த பரிமளா (52) என்ற பெண் ரூ.8 லட்சம் கடன் வாங்கினார். அதற்கு வட்டியும், அசலுமாக ரூ.17 லட்சத்தை திருப்பி கொடுத்த பின்பும் பணம் தரவில்லை எனக்கூறி வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி பணம் கேட்டு மிரட்டினார்.
தந்தை-மகன் கைது
இதையடுத்து பாதிக்கப்பட்ட 3 பேரும் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இணை கமிஷனர் மூர்த்தி மேற்பார்வையில் தாம்பரம் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கந்துவட்டி வசூலித்த தந்தை-மகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் குட்டி நாகூரானை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த அவருடைய மகன் கோபி, தங்கள் குறித்து போலீசில் புகார் அளித்தவரின் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த கோபியையும் போலீசார் கைது செய்தனர்
புகார் அளிக்கலாம்
இது தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது:-
கந்துவட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைதான தந்தை-மகன் ஆகியோரால் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி போலீஸ் நிலையங்களில் தைரியமாக புகார் அளிக்கலாம். அதன் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.