கோவில்பட்டியில் 2 குழந்தைகளுடன் தந்தை திடீர் சாலைமறியல் போராட்டம்
கோவில்பட்டியில் 2 குழந்தைகளுடன் தந்தை திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 39). ஐ.டி.ஐ படித்துள்ள இவர் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு திரும்பியுள்ளார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவியும், தமிழரசன் (வயது 9), கௌதம் (வயது 5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரிவர வேலைக்கு செல்லவில்லை என்பதால் அவரது மனைவி கடலைமிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து தனது குடும்பத்தினை காப்பாற்றி வருகிறார். அவருக்கு சொந்த ஊரிலும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் நேற்று மாலையில் திடீரென தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். முன்னுக்கு பின் முரணாக பேசி கொண்டு இருந்தார். பின்னர் அவரது மனைவியை வரவழைத்த போலீசார் 3 பேரையும் ஒப்படைத்தனர். பின்னர் கோபாலகிருஷ்ணனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தினால் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.