பழுதடைந்த மின்மாற்றி சீரமைப்பு
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருத்துறைப்பூண்டி அருகே பழுதடைந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி ஊராட்சி பருத்திசேரி பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியின் அடிப்பகுதி மிகவும் பழுதடைந்து சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இந்த மின்மாற்றி சாய்ந்து விழுந்தால் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பனைமரம் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர் பருத்திச் சேரிராஜா மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, `தினத்தந்தி'யில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தி பிரசுரமாகி இருந்தது.
சீரமைக்கப்பட்டது
இதன் எதிரொலியாக திருத்துறைப்பூண்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் பிரபு மேற்பார்வையில் மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.