வீட்டுக்குள் புகுந்த கரடியால் அச்சம்
வீட்டுக்குள் புகுந்த கரடியால் அச்சம்
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக செல்லும் சாலை விளங்குகிறது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கரடி ஒன்று அங்குள்ள வீட்டின் பாதுகாப்பு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றது. இதை கண்ட வளர்ப்பு நாய் குரைக்க தொடங்கியது. சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் மின் விளக்கை ஒளிர செய்துவிட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அப்போது கரடி உலா வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி, அதன்பிறகு அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதேபோன்று அந்த பகுதிக்கு செல்லும் சாலையில் முள்ளம் பன்றி ஒன்றும் உலா வந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்வதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.