கடலூரில் திருச்சபைகளின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூரில் திருச்சபைகளின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றதை கண்டித்தும், கிறிஸ்தவ பழங்குடி மக்களுக்கு எதிரான இன அழிப்பு வெறியாட்டங்களை கண்டித்தும், இந்திய ஜனநாயகத்தை அச்சுறுத்தும் பொது சிவில் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் ஏ.எல்.சி. பேராலய போதகர் பீட்டர்பால் தாமஸ் தலைமை தாங்கினார். போதகர்கள் ராபர்ட், ஸ்டீபன் தேவனேசன், ஜான்சன், சி.எஸ்.ஐ. தூய எபிபெனி ஆலயம் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாநகர தி.மு.க. துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பழனி பாரூக், மனிதநேய மக்கள் கட்சி ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் போதகர் செல்வராஜ், மக்கள் பேரவை நளினி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், வல்லரசு, த.மு.மு.க. ரஹீம், போதகர் நிக்கோலஸ், மாநகராட்சி கவுன்சிலர் கிரேசி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பால்கி, பொது நலச் சங்கம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.