நாமக்கல்லில் கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


நாமக்கல்லில் கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
x
நாமக்கல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெண்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட முறையை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பினர் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் தங்கராஜ், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி போராட்டத்திற்கான நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். இதனிடையே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து பின்பற்றும் பெண்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டு முறையால், அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்த ஆண் கால்நடை மருத்துவர்கள் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஐகோர்ட்டு தீர்ப்பின்படி சீரமைக்கப்பட்ட பட்டியலை விரைந்து வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறப்பு ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட 120-க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த ஆண் கால்நடை மருத்துவர்களுக்கு, கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை வழங்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தாமோதரன், நாகராஜ், சங்கிலி, விக்ரம்குமார் உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து கால்நடை மருத்துவ பட்டதாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story