மாணவர் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும்-தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்-ஆசிரியர்-ஆலோசகர்கள் கருத்து


மாணவர் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும்-தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்-ஆசிரியர்-ஆலோசகர்கள் கருத்து
x

மாணவர் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும், தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள் கூறியும் ஆசிரியர்-ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்

திருநெல்வேலி

தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும்நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார்.

அந்தநேரத்தில் சக மனிதர்களும், சுற்றியுள்ள சமூகமும் சம்பந்தப்பட்ட நபருக்கு செவிசாய்க்கும் பட்சத்தில், உடனடியாக அவர் அந்த முடிவில் இருந்து மனம் மாறிவிடுகிறார். ஆனால், தற்போது நாம் வாழும் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு தாமதம் ஆவதாலேயே தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

தற்கொலை எண்ணம் கொண்ட ஒருவர், அவரது நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் அதை வெளிப்படுத்துவார். அதை நண்பர்களோ, உறவினர்களோ உடனே உணர்ந்து கொண்டால் அவர்களின் எண்ணங்களை மாற்றி நல்வழிப்படுத்திவிட முடியும். இன்றைய நாகரிக உலகில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்புக்கு, அடித்தளமாக அமைந்து விடுகிறது.

காரணங்கள்

கடன் தொல்லை, வேலை கிடைக்கவில்லை, குடும்ப பிரச்சினை, திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் ஏமாற்றம், உடல்நிலை சரியில்லை, காதல் தோல்வி, போதை பழக்கத்துக்கு அடிமை, படிப்பில் சாதிக்க முடியாத நிலை, தேர்வுகளில் தோல்வி போன்றவைகளே பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணங்களாக அமைகின்றன.

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பவர்களின் தற்கொலைகளும் தற்போது புதிதாக இணைந்து இருக்கின்றன.

தற்கொலை செய்துகொள்வதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதும் வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் தங்களை மட்டும் காயப்படுத்திக் கொள்வது இல்லை. மாறாக, அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புள்ளி விவரங்கள்

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை காணமுடிகிறது.

கடந்த 2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2021-ம் ஆண்டு அது ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 ஆக உயர்ந்து இருப்பதுடன், அதில் 18 வயதுக்குட்பட்ட இளவயதினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.

தமிழ்நாடு 2-வது இடம்

இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2021-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களில் 940 பேர் மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் என்பது வேதனையிலும் வேதனை.

இது ஒரு புறம் இருக்க 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மேலும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதில், 10 ஆயிரத்து 692 பேர் தற்கொலை செய்து கொண்டதில், 525 பேர் மாணவச் செல்வங்களாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது மேலும் மனவலியாக இருக்கிறது.

மனநல ஆலோசனை

மாணவச் சமுதாயத்தின் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது.

அந்த கேள்விக்கு பதிலாக, மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம், அவர்களைத் தற்கொலை முடிவுகளில் இருந்து விடுவிக்க முடியும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

பள்ளிகளில் மனநல ஆலோசனை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டாலும், அது பெயர் அளவிலேயே இருக்கிறது. அதனை மீண்டும் முறைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்து இருக்கிறது.

இதுபற்றி ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மனநல கல்வி தேவை

மனநல டாக்டர் பன்னீர்செல்வம்:-

50 வயதுக்கு மேற்பட்டோரில் மாரடைப்பால் அதிகம் பேர் இறக்கிறார்கள். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இறப்பதற்கு விபத்து காரணி முதலிடத்திலும், தற்கொலை 2-வது இடத்திலும் உள்ளது. தற்போது கூட்டு குடும்பங்கள் குறைந்து தனிக்குடும்ப வாழ்க்கை முறை அதிகமாகி விட்டன. மேலும் செல்போன் வந்த பிறகு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும், ஒவ்வொருவரும் தனித்தனியாகவே வாழ்கிறோம். பெற்றோர், குழந்தைகள் என தனித்தனியாக அமர்ந்து செல்போனோடு வாழ்கிறார்கள். இது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மிகுந்த தனிமையை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், தோல்வியை தாங்கிக் கொள்ளும் பக்குவம் ஏற்படாமலும் போய் விடுகிறது. கல்வி, காதல், சமுதாய பிரச்சினை இவற்றில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால் கோபம் தன்மீது திரும்பி உடனடியாக தற்கொலை முடிவு எடுக்கிறார்கள்.

இதை தவிர்க்க பெற்றோர்கள் தினமும் குழந்தைகளுடன் மனம் விட்டு பேச வேண்டும். ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். குறிப்பிட்ட பாடத்தை படிக்குமாறு திணிக்கக்கூடாது. அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க அனுமதிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். விளையாட்டுகளில் வெற்றி-தோல்வி கண்டிப்பாக இருக்கும். அப்போது மாணவர்கள் தோல்வியையும் எதிர்கொள்ளும்போது தற்கொலை முடிவுக்கு ஒருபோதும் செல்ல மாட்டார்கள். பள்ளிகளில் உடல் ஆரோக்கியம் போல் மனநல கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

தோல்வி பழக்கப்படவில்லை

பேட்டையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் ராஜலிங்கம்:-

தோல்வியை சந்திப்பதாலோ அல்லது தோல்வியை சந்தித்து விடுவோம் என்ற பயத்தாலோ சிலர் தற்கொலை முடிவை தேடிக்ெகாள்கின்றனர். தன்னை பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற கற்பனையே பலரை தவறான முடிவு எடுக்க வழிவகுக்கிறது. இன்றைய சூழலில் குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தங்களது பருவ குழந்தைகளுடன் விளையாடி தோல்வியை அடைவது என்பது பல குழந்தைகளுக்கு பழக்கப்படவில்லை.

பெற்றோர்களும் தாங்கள் அனுபவித்த துயரங்களை தங்களது குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணி அவர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி, அவர்கள் பக்குவம் இன்மைக்கு காரணமாகி விடுகிறார்கள். குழந்தைகளை பெற்றோர்கள் கண்டிக்கக்கூடிய நேரத்தில் கண்டிக்க வேணடும். சுதந்திரம் கொடுக்கும்போது அவர்கள் எல்லையை மீறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களது இன்ப, துன்பங்களில் பெற்றோர்களும் பங்கெடுத்துக் கொள்ள முடியும். இதன்மூலம் குழந்தைகள் மனம் விட்டு பேசும் வாய்ப்பு ஏற்படுவதால் தவறான முடிவுக்கு செல்ல மாட்டார்கள்.

நல்ல நண்பர்கள்

நெல்லையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்:-

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்பது குறித்தும், அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகள் நல்ல நண்பர்களுடன் பழகுகிறார்களா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்கள் நல்வழியில் நடப்பதற்கும், தவறான பாதையில் செல்வதற்கும் நட்பு வட்டாரமே காரணம். எனவே, அதனை பெற்றோர்கள் கவனித்து நல்ல நண்பர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ள உதவ வேண்டும்.

குழந்தைகளின் நியாயமான கோரிக்கைகளையும், தேவைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் முன்பாக பெற்றோர்கள் சண்டை போடுவதாலும் அவர்களின் மனம் பாதிக்கும். பொதுவாக நாம் குழந்தைகளிடம் நண்பர்கள் போல் பழகினாலே அவர்கள் பாசத்துக்கு அடிமையாகி விடுவார்கள். அவர்களின் மனதில் தற்கொலை எண்ணம் ஒருபோதும் வராது. மேலும் பள்ளிகளில் மனநல வகுப்புகளும் நடத்த வேண்டும்.

செல்போனால் பாதிப்பு

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மனநல டாக்டர் நிர்மல்:-

இணையம், செல்போன் ஆகியவை நம்முடைய வாழ்க்கை முறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை தான். ஆனால் அவை இளம் தலைமுறையினரின் பொன்னான நேரத்தை எடுத்துக் கொள்ளும்போது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரம் குறைகிறது. இதனால் பெற்றோர்கள் அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது. வளர் இளம் பருவத்தில் இருபாலருக்கும் உணர்வு சார்ந்த குழப்பங்கள் இருப்பது சகஜமே. மாணவர்கள் தங்களுக்குள் ஏற்படும் உணர்வு சார்ந்த பிரச்சினைகளை தடை இன்றி பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோருக்கு தெரியாமல் பிரச்சினைகளை சமாளித்து விடலாம் என்ற முயற்சியிலேயே அவற்றை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். இறுதியில் பெற்றோருக்கு தெரிந்தால் தண்டிக்கப்படுவோமோ என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வது, தற்கொலை முயற்சி ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். சிக்கலான நேரத்தில் முறையான ஆலோசனையை பெற்றோர், ஆசிரியர், உறவினர்களிடம் பெறும்போது அவற்றில் இருந்து மீளலாம். தமிழக அரசின் சிறப்பு அழைப்பு எண்ணான 14416-ல் 24 மணி நேரமும் மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

----------------------------------------------------------------------------------------

'புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்'

தென்காசியை சேர்ந்த ஆசிரியர் வின்சென்ட் கூறுகையில், 'மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் அதிக எதிர்பார்ப்பும், அதனால் ஏற்படும் ஏமாற்றமே ஆகும். எனவே கல்வியானது தன்னம்பிக்கை, துணிச்சல், மனஉறுதி ஆகியவற்றை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்கு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விளையாட்டு வெற்றியையும், தோல்வியையும் சமமாக பாவிக்கும் பக்குவத்தை வழங்கும். அதோடு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை படிக்க செய்வதால் தோல்வியை வெற்றியாக மாற்றும் வித்தையை தெரிந்து கொள்வார்கள். மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு தம் மீதும் அக்கறை காட்டுவதற்கு சிலர் இருக்கிறார்கள் என நம்பிக்கையூட்டும் வகையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் நடந்து கொண்டால் தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியும்' என்றார்.

-----------------------------------------------------------------------------------------

12 ஆண்டுகளில் நிகழ்ந்த மாணவர் தற்கொலைகள்

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தற்கொலை செய்து கொண்டவர்களின் புள்ளி விவரங்களில், மாணவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்கள் வருமாறு:-

ஆண்டு - மாணவர்கள் எண்ணிக்கை

2011 - 849 பேர்

2012 - 795 பேர்

2013 - 866 பேர்

2014 - 853 பேர்

2015 - 955 பேர்

2016 - 981 பேர்

2017 - 810 பேர்

2018 - 953 பேர்

2019 - 914 பேர்

2020 - 930 பேர்

2021 - 940 பேர்

2022 (ஜூன் வரை) - 525 பேர்


Next Story