செல்போன் கடை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் கடை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ஏ.கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கிருபா என்கிற கீர்த்தனா (வயது 23). இவர் கடந்த 4 மாதங்களாக விழுப்புரத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கிருபா, யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். பின்னர் அங்குள்ள படுக்கை அறைக்கு சென்ற கிருபா, கதவை தாழிட்டுக்கொண்டார். சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர் சாப்பிட அழைத்தனர். ஆனால் வெகுநேரமாகியும் வராததால் அந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு கிருபா, மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கிருபாவை மீட்டு சிகிச்சைக்காக ஏ.கே.குச்சிப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே கிருபா இறந்துவிட்டதாக தெரிவித்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து ராஜேந்திரன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.