ஓட்டப்பிடாரம் அருகே தபால் அலுவலக பெண் ஊழியர் கள்ளக்காதலனுடன் தற்கொலை- காட்டுப்பகுதியில் விஷம்குடித்து பிணமாக கிடந்தனர்
ஓட்டப்பிடாரம் அருகே, தபால் அலுவலக பெண் ஊழியர் கள்ளக்காதலனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காட்டுப்பகுதியில் உடல்கள் மீட்கப்பட்டன
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, தபால் அலுவலக பெண் ஊழியர் கள்ளக்காதலனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காட்டுப்பகுதியில் உடல்கள் மீட்கப்பட்டன.
டாஸ்மாக் கடை விற்பனையாளர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் மயிலேறி (வயது 40). இவர் முத்தையாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். மயிலேறிக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் செல்வமணி. கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். செல்வமணியின் மனைவி மகராசி (33). கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் உள்ள கிளை தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கள்ளக்காதல்
இந்தநிலையில், மயிலேறிக்கும், மகராசிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது அவர்களது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் ஊரை விட்டு மாயமாகி விட்டனர். இதுகுறித்து மயிலேறியின் மனைவி இந்திரா ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். மயிலேறியை போலீசார் தேடி வந்தனர்.
விஷம்குடித்து தற்கொலை
நேற்று முன்தினம் இரவு வெள்ளாரம் ஊருக்கு அருகே காட்டுப் பகுதியில் இரண்டு பேர் இறந்து கிடப்பதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது, இறந்து கிடந்தது கள்ளக்காதல் ஜோடி மயிலேறி, மகராசி என்று தெரியவந்தது. இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை போலீசார் அறிந்தனர்.
கடிதம் சிக்கியது
இதைத்தொடர்ந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மயிலேறி, மகராசி ஆகியோர் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் இருவரும் எழுதி இருப்பதாவது:-
எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்களே காரணம். நாங்களே எங்கள் முடிவை தேடிக்கொள்கிறோம். எங்கள் சாவுக்காக யாரையும் விசாரணை செய்ய வேண்டாம்.
இவ்வாறு எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் ேஜாடி விஷம் குடித்து காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.