மோட்டார் சைக்கிள் மோதி பெண் என்ஜினீயர் பலி
திருவெறும்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் என்ஜினீயர் பலியானார்.
திருவெறும்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் என்ஜினீயர் பலியானார்.
என்ஜினீயர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி 15-வது தெருவை சேர்ந்தவர் குமாரமங்கலம். இவர் துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் காயத்ரி (வயது 25).
பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்துள்ள காயத்ரி நவல்பட்டு போலீஸ் காலனியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று காலையில் இவர் பணிக்கு வழக்கம் போல் ஸ்கூட்டரில் சென்றார். மேட்டு கட்டளை வாய்க்கால் ஆற்றங்கரை சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
சாவு
இதில் கீழே விழுந்த காயத்ரி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது, இதை கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரி மீது மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர். மேலும் விபத்து நடைபெற்ற மேட்டு கட்டளை வாய்க்கால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.