காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலி
கூடலூர் அருகே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
கூடலூர்,
கூடலூர் அருகே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
யானை தாக்கியது
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன சூண்டி பகுதியை சேர்ந்தவர் அல்லி முத்து. இவரது மனைவி ராஜகுமாரி (வயது 45). கணவர் இறந்து விட்டார். ராஜகுமாரி குயின்ட் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அவருடன் சில தொழிலாளர்களும் வந்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் சாண்டில்ஸ் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் வந்த போது, அங்கு நின்றிருந்த 3 காட்டு யானைகள் தொழிலாளர்களை துரத்தியது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், ஒரு காட்டு யானையிடம் ராஜகுமாரி சிக்கினார். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை காட்டு யானை தாக்கியது.
தொழிலாளி பலி
இதில் சம்பவ இடத்திலேயே ராஜகுமாரி படுகாயமடைந்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டினர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜகுமாரியை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்த நியூஹோப் போலீசார், ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானைகளால் உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.